மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடு எலும்புகளுடன் ஆர்ப்பாட்டம், மறியல்: வேளாண் சட்ட நகலையும் எரித்தனர்

திருச்சி: விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி மத்திய அரசு 3 வேளாண் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாளான நேற்று, வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாய விளை பொருள்களுக்கு உரிய லாபம் வழங்கிட வலியுறுத்தியும், கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாய் இழந்து தவிக்கும் நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த பயிர்களை, காய்கறிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் பறிமுதல் மற்றும் வழக்கு பதிவதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி - கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன்னதாக விவசாயிகள் மண்டை ஓடுகள், எலும்புகளுடன் இலை தழைகளை கட்டிக் கொண்டும், அரை நிர்வாணத்துடன் வந்து கரூர் பைபாஸ் ரோடு சாலையில் வேளாண் சட்டங்களை கிழித்து எறிந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மணப்பாறை:  மணப்பாறையில் கம்யூனிஸ்ட் சார்பில் நகர நிர்வாககுழு உறுப்பினர் இளையராஜா தலைமையில் வேளாண் சட்ட நகல் எரித்துப் போராட்டம் நடந்தது. ஆவாரம்பட்டி, பூலாம்பட்டி, மருங்காபுரியிலும் போராட்டம் நடந்தது. அதேபோல் விவசாயிகள் சங்கத்தினர் இந்திய கம்யூ., அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கட்சியினர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையிலும் சட்ட நகல் எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: