திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவின் மருமகனுக்கு பொதுச் செயலாளர் பதவி: ‘ஓடியவர்கள்’ பற்றி முடிவு எடுக்கவில்லை

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நேற்று கூடியது. இதில், கட்சியில் ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டுமென்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான சுப்ரதா பக்‌ஷிக்கு பதிலாக தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை நியமிக்க மம்தா பரிந்துரைத்தார்.

இதை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம், டைமண்ட் துறைமுக தொகுதி மக்களவை எம்பி.யான அபிஷேக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் வகித்த கட்சி இளைஞரணி பதவி சயோனி கோஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுப்ரதா பக்‌ஷி, மாநில கட்சித் தலைவராக பதவி வகிப்பதால் அவர் பொதுச் செயலாளர் பதவியில் இஷலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல்லில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருப்பது தொடர்பாக காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை என மூத்த தலைவர் பார்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Stories: