மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நண்பர்கள் அளித்த தகவல்களால் பள்ளி நிர்வாகிகள் சிக்குகின்றனர்

சென்னை: தற்காப்பு பயிற்சியின் போது மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீதான வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமம் சார்பில் பெங்களூரு உட்பட தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளது. இந்த பள்ளி குழுமத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்மா ேசஷாத்திரி பள்ளி குழுமத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் பலர் தங்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக டிவிட்டரில் பதிவு செய்தனர். அதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளியின் கே.கே.நகர் கிளையில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது பள்ளி மாணவி ஒருவர், தன்னை நாகையில் பள்ளிகளுக்கு இடையே நடந்த ஜூடோ போட்டியில் கலந்துகொள்ள காரில் சென்ற போது கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். புகாரின்படி போலீசார்  கராத்தே மாஸ்டர் கெவின்ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவிகளுக்கு கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அதை அவரது நண்பர்களான 3 பேர் நேரில் பார்த்ததாகவும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதைதொடர்ந்து கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் நண்பர்கள் அளித்த தகவலின்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மாணவிகளை வெளி மாவட்டங்களில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளிகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது வழக்கம். அப்படி பயிற்சிக்கு சென்னை கிளையில் உள்ள பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற போது, கெவின்ராஜ் அந்த மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும், உடன் வரும் தனது நண்பர்களுக்கும் அவர்களை விருந்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதோடு இல்லாமல்  கெவின்ராஜ், பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தில் உள்ள அறக்கட்டனை நிர்வாகிகள் சிலரிடம் நெருக்கமாகவும், நம்பிக்கையாகவும் இருந்து வந்துள்ளார். இதனால் நிர்வாகிகள் சிலரும் மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நண்பர்கள் அளித்த பரபரப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து போலீசார், கராத்தே மாஸ்டர் கெவின்ராஜால் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறை அறிவித்துள்ள 94447 72222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று அறிவித்தனர். தொடர்ந்து, பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ், பள்ளி நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகளும் காவல்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமம் மாணவிகளின் பாலியல் வழக்கை திசை திருப்பும் வகையில் பல வகையில் மாநகர காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளை முழுமையாக கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளது. இதனால் பாலியல் குற்றச்சாட்டு நடந்த பகுதியில் உள்ள போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த வழக்கில் முழு விவரங்கள் தெரியவரும். எனவே, ெசன்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீதான பாலியல் வழக்கு சென்னை மாநகர காவல்துறையில் சிபிசிஐடிக்கு மாற்ற போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தமிழக காவல்துறை டிஜிபிக்கு பரிந்துரை கடிதம்  எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த பரிந்தரை கடிதத்தை தொடர்ந்து மாநகர காவல் துறையில் இருந்து பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீதான விசாரணை அறிக்கையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகள் பாலியல் வழக்கு மாநகர காவல்துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சம்பவம் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளின் பெற்றோரை கலக்கமடைய செய்துள்ளது.

Related Stories: