இரணியல் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா சோதனைக்கு பயந்து 3 பெண் ஊழியர்கள் தப்பி ஓட்டம்

திங்கள்சந்தை: இரணியல் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து 3 பெண் ஊழியர்கள் தப்பி ஓடினர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. மெல்ல, மெல்ல இப்போது தான் கட்டுப்பாடுகள் தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.  இதையடுத்து, இரணியல் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நேற்று காலை சுகாதார துறையினர் சென்றனர். அப்போது, 3 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் பெண் ஊழியருக்கு கொரோனா உறுதியாகி இருக்கும் தகவலை கூறி, மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வந்திருக்கும் தகவலை கூறினர்.

இந்த தகவலை கேட்டதும், 3 பெண் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதோ வந்து விடுகிறோம் என கூறி சென்றவர்கள், பின்வாசல் வழியாக தப்பி விட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த ஊழியர்கள், அலுவலகத்துக்குள் சென்றபோது அந்த 3 பெண் ஊழியரும் தப்பி ஓடிய தகவல் தெரிந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த 3 இளம்பெண்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்திய பிறகே பணிக்கு வர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: