கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வரும்போது வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும்: கட்சியினர் சந்திக்க வரக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை இன்று (20ம்தேதி) மற்றும் நாளை (21ம்தேதி) சேலம், திருப்பூர். கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன். இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் திமுக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாது.  எனவே, திமுகவினர் நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும்,  இந்தப் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபட கூடாது. மேலும் எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் திமுக கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். திமுகவினரான உங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும், பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை திமுகவினர் தவறாது கடைபிடித்திட வேண்டுகிறேன்.இவ்வாறு  அவர் கூறியுள்ளார்….

The post கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வரும்போது வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும்: கட்சியினர் சந்திக்க வரக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: