அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ, அண்ணாநகர் மேற்கில் 12 செ.மீ, மணலி புதுநகரில் 10 செ.மீ, கத்திவாக்கம், பெரம்பூரில் தலா 9 செ.மீ, வடபழனி, புழல், கொளத்தூரில் தலா 8 செ.மீ, மாதவரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளான திருவாலங்காட்டில் 11 செ.மீ, திருத்தணி, கேளம்பாக்கத்தில் தலா 6 செ.மீ, சோழவரத்தில் 5 செ.மீ, செம்பரம்பாக்கம், தாம்பரம், குன்றத்தூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக, கோயம்பேடு மார்க்கெட், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் விரைந்து அகற்றப்பட்டது. செங்குன்றம், சோழவரம், புழல் உள்ளிட்ட புறநகரில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் ஏரியில் நேற்று முன்தினம் 140 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 707 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2197 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 15.87 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 0.23 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரிக்கு 11 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் ஏரிகளில் நீர் இருப்பு மெல்ல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவடி பகுதியில் பெய்த கன மழை காரணமாக பருத்திப்பட்டு ஏரி நிரம்பியது.
இதன் காரணமாக நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியிலிருந்து 100 கன அடி நீரை வெளியேற்றினர். வெளியேற்றப்படும் உபரிநீர் அதன் தொடர் இணைப்பில் உள்ள அயப்பாக்கம் ஏரிக்கு வந்தடைந்து. இதனால் அயப்பாக்கம் ஏரியும் நிரம்பி அம்பத்தூர் ஏரிக்கு உபரி நீர் செல்கிறது. அயப்பாக்கத்தில் 13.4 செமீ மழை பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, பூண்டி ஏரி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி ஆகியவற்றுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது, என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.