98வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: முன்களப்பணியாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்; மரக்கன்று நடும் திட்டமும் தொடக்கம்

சென்னை: கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்து, முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 98வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றிப் பயணம்!’ என எழுதப்பட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, நினைவிடம் அருகே மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்று வீதம் மொத்தம் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக, மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலைஞர் நினைவிடத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்ளிட்ட எம்எல்ஏக்கள், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட எம்பிக்கள், பகுதி செயலாளர் மதன்மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் ராசாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலின், செல்வி செல்வம், மு.க.தமிழரசு, அருள்நிதி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் உருவச்சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். அங்கு அவர் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், டாக்டர் எழிலன், பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சிஐடி நகர் இல்லத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கொரோனா காலகட்டம் என்பதால் கலைஞரின் பிறந்தநாளை இல்லத்தில் இருந்து கொண்டாடி, ஏழைகளுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி திமுகவினர் கொண்டாட வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடினர். ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் உரிய அனுமதி பெற்று மக்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் நிவாரண உதவிகளையும் வழங்கினர். சென்னையை பொறுத்தவரை, சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகங்களில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் ஏற்பாட்டில் மூன்று வேளையும் மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது.

Related Stories: