கொரோனா இல்லாத கிராமத்துக்கு ரூ.50 லட்சம் பரிசு: மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு

மும்பை: கொரோனா இல்லாத கிராமத்திற்கு பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா இல்லாத கிராமங்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா இல்லாத கிராமத்தை உருவாக்கினால் முதல் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ .25 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ .15 லட்சமும் வழங்கப்படும்.

மாநிலத்தில் ஆறு வருவாய் மண்டலங்கள் உள்ளன. அதனால், மொத்தம் 18 விருதுகள் வழங்கப்படும். இதற்காக ரூ .5.4 கோடி ஒதுக்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் கிராமங்களுக்கு, பரிசுத் தொகையுடன் கூடுதல் சன்மான தொகையும் வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையானது கிராமங்களின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். போட்டியில் பங்கேற்கும் கிராமங்களுக்கு 22 வகையிலான விதிமுறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பரிசு வழங்கப்படும். சமீபத்தில் சோலாப்பூர் மாவட்டம் காட்னே கிராம இளம் பஞ்சாயத்து ரிதுராஜ் தேஷ்முக் (21) அவரது கிராமத்தை கொரோனா வைரசிலிருந்து விடுவித்ததற்காக முதல்வரின் பாராட்டை பெற்றார்’ என்றார்.

Related Stories: