ஏலகிரி மலையில் ஒரே கிராமத்தில் 13 பேருக்கு கொரோனா-தனிமைப்படுத்தும் கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் உள்ள ஒரே கிராமத்தில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் கட்டிடத்தை எம்எல்ஏ க.தேவராஜி நேற்று திறந்து வைத்தார்.ஜோலார்பேட்டை பகுதியில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும், கடந்த வாரத்தில் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்தில் 5 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனை அடுத்து கலெக்டர் ம.ப.சிவன்அருள், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூருக்கு சென்று அங்கு கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தனர்.

மேலும் அங்குள்ள மலைவாழ் மக்களிடம்  வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து அங்குள்ள மக்கள் அதிக அளவில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவு நேற்று வெளியானது. அதில் 13 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதியானது.

 இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் அத்தனாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையத்தை எம்எல்ஏ க.தேவராஜி நேற்று திறந்து வைத்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, பிடிஓக்கள் பிரேம்குமார், சங்கர், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், ஊராட்சி செயலாளர் சண்முகம் உட்பட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும்  ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள் மற்றும் நடமாடும்  கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் ஜோலார்பேட்டை நகரம், ஒன்றியம் என ஜோலார்பேட்டை வட்டார அளவில் நேற்று ஒரே நாளில் புதியதாக 67   பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை அரசு மருத்துவர்கள் புகழேந்தி, முரளி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள்  பாதிக்கப்பட்டவர்களின் பகுதிக்கு சென்று  கிருமிநாசினி மருந்து தெளித்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மற்றும் அக்ராவரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஏலகிரி மலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தனியாக ஏலகிரி மலையில் ஒரு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ளவர்களை அங்கே தனிமைப்படுத்தி துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: