எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா…சீன அதிபர் திடீர் உத்தரவு

பீஜிங்: சீனாவின் அதிகாரப்பூர்வ மீடியாக்கள், தூதரக அதிகாரிகள் ஆகியோர் தங்களின் ஆக்ரோஷமான பேச்சுக்களை தவிர்த்து அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா விஷயத்தில் சீனா உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உலகையே பழிவாங்கும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதற்கு இதுவரை விடையில்லை. சீனா தான் இந்த வைரசை உருவாக்கியதாக உலக நாடுகள் குற்றம்சாட்ட, அதற்கு சீன அரசின் அதிகாரப்பூர்வ மீடியாக்களும், தூதரக அதிகாரிகளும் சரமாரி பதிலடி தந்து வருகின்றன.   இந்நிலையில், சர்வதேச அளவில் கருத்து தெரிவிக்கும் போது சீன ஊடகங்களும், தூதரக அதிகாரிகளும் சாந்தமான செயல்பட வேண்டுமென அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் வரலாறை நல்ல முறையில் காட்சிப்படுத்த புதிய களங்கள், கருத்துக்கள், வெளிப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

எனவே பிரதான ஊடகங்கள், அதிகாரிகள் தகவல்களை அடக்கத்துடன், பணிவுடன் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இமேஜ் நம்பிக்கைக்கு உரியதாக, அன்பானதாக, மரியாதைக்குரியதாக உருவாக்கப்பட வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த திடீர் உத்தரவால் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ‘‘சீனா அமைதியான வளர்ச்சியை விரும்புகிறது. இது சீனாவின் நலனுக்கும் அதற்கு அப்பாலும் உதவும்’’ என்றார்.  

Related Stories: