இந்தியாவில் உருவான டெல்டா வைரஸ் மிக ஆபத்தானது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா:  இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘டெல்டா’ கொரோனா மட்டுமே மிக ஆபத்தானதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. முதல் அலையை காட்டிலும் 2 அலையின் வைரசின் தன்மை மிகத் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் 2 உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், முதலில் உருமாறிய பி.1.617 வைரஸ் 3 முறை  மரபணு மாற்றம் அடைந்து உருவாகி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்த 2 வைரஸ்களும் இந்திய வைரஸ் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதற்கு, உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, உலகளவில் தற்போது பரவி வரும் அனைத்து நாட்டு கொரோனா வைரஸ்களுக்கும் நேற்று முன்தினம் பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியது.

இதன்படி, இந்தியாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட பி.1.617.1 வைரசுக்கு ‘கப்பா’ என்றும், 2வது கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரசுக்கு டெல்டா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் உருமாறிய பி.1.167 டெல்டா வகைதான் தற்போது மிகவும் கவலைக்குரியதாக, ஆபத்து மிகுந்ததாக இருக்கின்றது. மற்ற வைரஸ்களால் பெரியளவில் ஆபத்து இல்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட கேரள அமைச்சருக்கு தொற்று

கேரள தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ். இவர், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் ஏற்கனவே எடுத்துள்ளார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அருவிக்கரை மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஸ்டீபனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

Related Stories: