ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் மேல்நிலைப்பள்ளி தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கின்றார்.  ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை, இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள். மாணவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா? எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, . தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்.   எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு,

அதன்படி தமிழக அரசு  முடிவு எடுக்க வேண்டும். கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும். கால அவகாசம்: ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், மாணவர்கள் அஞ்சலகங்களை அணுகுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக  தெரிவிக்கப்படும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள் மற்றும் விளக்கங்களை உடனடியாக பெற முடியாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஆகவே, அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும் என மற்றொரு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories: