பினராயி, ஹேமந்த் சோரன் கோரிக்கையை தொடர்ந்து ப்ளீஸ்... தடுப்பூசி கொள்கையை மாத்துங்க!.. பிரதமர் மோடிக்கு பாஜக முதல்வரும் கோரிக்கை

புதுடெல்லி: தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய பிரதேச பாஜக முதல்வரும் அதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடுப்பூசி கொள்கையானது, தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 100 தடுப்பூசி கொள்முதல் செய்தால், அதில் 50 சதவீதத்தை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசே இலவசமாக வழங்கும். அதனை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கும். மீதமுள்ள 50 சதவீதத்தில் 25 சதவீதத்தை மாநில அரசு தங்களது பொறுப்பில் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

அதனை, 18 -  44 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இதில், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளின் விலையை காட்டிலும், தனியாருக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் விலை உயர்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  நாடு முழுவதும் தடுப்பூசி சப்ளை செய்ய வேண்டியுள்ளதால், பல மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் உள்ளன. மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக கூறிவிட்டு, தற்போது மாநிலங்களின் தலையில் விலைகொடுத்து வாங்க கட்டிவிடுவதா? என்று பல மாநில முதல்வர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

அதனால், தடுப்பூசி கொள்கையில் மாற்றம் தேவை என்று வலியுறுத்துகின்றனர். அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர், மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேச ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மாற்றுவது குறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், பிரதமர் மோடியிடம் கூட்டாக பேச வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு சரியான கொள்கை வகுத்துள்ளது. ஆனால் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அதை மாற்ற வேண்டும். முதல்வர்களின் கோரிக்கையை பிரதமர் ஏற்பார். மற்ற மாநில முதல்வர்களுடன் பேச, நான் முன்முயற்சி எடுத்து வருகிறேன். மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்பட, மத்திய அரசு சீரான கொள்கையை கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Related Stories: