நாடுகளின் பெயரை குறிப்பிட்டு அழைப்பதால் சர்ச்சை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு பெயர்: கப்பா, டெல்டா என அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஜெனிவா: கொரோனா உருமாற்ற வகை வைரஸ்களை எளிதில் அடையாளப்படுத்த அவைகளுக்கு புதிய பெயர்களை உலக சுகாதார நிறுவனம் சூட்டி உள்ளது. இந்திய வகை வைரஸ்களுக்கு கப்பா, டெல்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலைக்கு பின் புதுப்புது உருமாற்ற வகை வைரஸ் பிறழ்வுகள் ஏற்பட்டன. முதல் அலை அடங்கிய பிறகு முதல் முறையாக இங்கிலாந்தில் வீரியமிக்க புது உருமாற்ற வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா, பிரேசில் வகை என பலப்பல உருமாற்றங்களை கொரோனா பெற்றது. இதில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் அதிதீவிர வகையாக உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகக் கொடூரமாக மாற, இந்த உருமாற்ற வகை வைரஸ்தான் காரணம். இதனை இந்திய வகை வைரஸ் என உலக நாடுகள் அடையாளப்படுத்தின. இதற்கு மத்திய அரசு சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது. ‘இது, இந்திய வகை வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் எந்த இடத்திலும் குறிப்பிடாத போது, இந்தியாவின் பெயரை வைரசுடன் சேர்த்து குறிப்பிடுவது சரியல்ல, அவ்வாறு அழைப்பதை நிறுத்த வேண்டும்,’ என்று மத்திய அரசு, உலக சுகாதார நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது. மேலும், புதுப்புது வைரஸ்களை அவற்றின் அறிவியல் எண்களை கொண்டு அடையாளப்படுத்துவது கடினமாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் உலக சுகாதார நிறுவனம் உருமாற்ற வகை வைரஸ்களுக்கு புதுப்புது பெயர்களை சூட்டி உள்ளது.

அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரசுக்கு ‘கப்பா’ என்றும், இரண்டாவதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரசுக்கு ‘டெல்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்க எழுத்துக்கள் அகர வரிசைப்படி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட முதல் உருமாற்ற கொரோனா வைரசுக்கு (பி.1.1.7) ‘ஆல்பா’ என்றும், தென் ஆப்ரிக்கா வகைக்கு (பி.1.351) ‘பீட்டா’ என்றும், பிரேசிலில் வகைக்கு ‘காமா’ என்றும், பி.2 வகைகளுக்கு ‘ஜெடா’ என்றும், அமெரிக்கா வகைகளுக்கு ‘எப்சிலான்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

  இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் தனது டிவிட்டர் பதிவில், ‘உருமாறிய கொரோனா வைரசை எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை. பொதுத் தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே, இனி நம்பர்கள் குழப்பமின்றி, இப்புதுப் பெயர்களையே குறிப்பிட்டுப் பேச முடியும்,’ என கூறி உள்ளார்.

மே மாதத்தில் மட்டும் 1.19 லட்சம் பேர் பலி

கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 90 லட்சத்து 25 பேர் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 19 ஆயிரத்து 189 பேர் இறந்துள்ளனர். உலக அளவில் ஒரே மாதத்தில் நிகழ்ந்த அதிகப்படியான கொரோனா மரணங்கள் இதுவே. இதற்கு முன், கடந்த ஜனவரியில் அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 99 ஆயிரத்து 680 பேர் இறந்துள்ளனர். தற்போது வரையில், உலக அளவில் 17 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டு, 35 லட்சத்து 46 ஆயிரத்து 900 பேர் இறந்துள்ளனர்.

வீட்டுக்கே சரக்கு சப்ளை; டெல்லி அரசு அனுமதி

டெல்லியில் கொரோனா  நோய் தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மருந்து, பால் மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க, மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால். மதுபான பிரியர்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்ய, டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே  ஆன்லைன் மூலம்  மதுபானத்தை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்பவர்களின் வீடுகளை தேடி சென்று  மதுபானம் விநியோகம் செய்யப்படும்.

தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு  

* இந்தியாவில் கடந்த 54 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரானா பாதிப்பு நேற்றும் சரிந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  1 லட்சத்து 27 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தினசரி பாசிடிவ் விகிதம் 6.62 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44 ஆக உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 2,795 பேர் பலியாகி உள்ளனர். இது, கடந்த 35 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவான மரணங்களாகும்.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 நாட்களுக்கு பிறகு 20 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. தற்போது 19 லட்சத்து 25 ஆயிரத்து 374 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

மத்திய கல்வி அமைச்சர் எய்ம்சில் அனுமதி

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கொரோனா பாதிப்புக்குப் பிறகான சில உடல் உபாதைகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 21ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். தற்போது அவர் டாக்டர் நீரஜ் நிஸ்சலின் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: