ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கர்நாடகாவில் இருந்து ரயில்களில் கடத்திய 100 லிட்டர் மது பாக்கெட்டுகள் பறிமுதல்-8 பேர் கைது

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்த 8 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழக அரசின் நடவடிக்கையால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில்  விதிமீறி மது பாட்டில்கள் மற்றும் சாராய விற்பனை அதிகரித்து வருகிறது.

இதனால் காவல் துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் சாராயம் விற்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். விற்பவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்பின்றி உள்ளவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கள்ளத்தனமாக ரயில் மூலம் மது பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள் போன்றவற்றை குறைந்த விலைக்கு வாங்கி தமிழகப் பகுதிக்கு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை ஒரு தொழிலாக ஆரம்பித்துள்ளனர்.

இதனால் பழைய சாராய  வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாலும், தற்போது புதியதாக வியாபாரிகள் உருவாகி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் மது பாக்கெட்டுகள் பாட்டில்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முரளி, மனோகரன் மற்றும் போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் நேற்று அதிகாலை ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி ஜோலார்பேட்டை வழியாக செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று அதிகாலை 5வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அப்போது அந்த ரயிலை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (22) என்பவரை ரயில்வே போலீசார் பிடித்து அவரிடம் இருந்த 224 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

மேலும் அதே ரயிலில் இருக்கையின் அடியில் 275 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். ஆனால் அவற்றை கடத்தி வந்த மர்ம நபர் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இதே போன்று பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை நோக்கி வந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 2வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த ரயிலை சோதனை செய்ததில் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த பாபு (45) என்பவர் ரயிலில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 195 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் நேற்று அதிகாலை இரண்டு ரயில்கள் மூலம் 100 லிட்டர் கொள்ளளவு உள்ள 694 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து, ரஞ்சித் குமார் மற்றும் பாபு ஆகிய இருவரையும் ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் கைது செய்து திருப்பத்தூர் மது அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்துவிடம் நேற்று அதிகாலை ஒப்படைத்தனர்.

இதேபோல்  ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் மது பாட்டில்களை கடத்தி  மர்ம நபர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

அப்போது லால்பாக் எக்ஸ்பிரஸ் மற்றும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் இறங்கி நடந்து வந்த 6 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.  

மேலும் அவர்களிடமிருந்த 180மில்லி மது பாக்கெட் 274 பாக்கெட்டுகள் மற்றும் ஒரு லிட்டர் 54 பாட்டில்களும்  பறிமுதல் செய்து திருப்பத்தூர் மது அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி முத்துவிடம் ரயில்வே பாதுகாப்பு படை  இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மற்றும் சிறப்பு காவலர்கள் கார்த்திகேயன், மகேந்திரன் ஆகியோர்  ஒப்படைத்தனர்.

Related Stories: