மானூர் அருகே காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5பேர் கைது

மானூர் : மானூர் அருகே காட்டுப்பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்து ஊறலை அழித்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் கொரோனா 2ம் தொற்று வேகமாக பரவியதையடுத்து அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அதன்படி நேற்று மானூர் காவல் நிலைய எஸ்.ஐ செல்வக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மானூர் பெரியகுளத்து கரையில் கள்ளசாராயம் விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், மடத்தூர் அருகே காட்டுப்பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது பானை வைத்து கள்ளசாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் 5 பேர் தப்பியோடி முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அங்கிருந்த சாராய ஊறலையும் கைப்பற்றி அழித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருமலாபுரத்தை சேர்ந்த சுடலை மகன் பெரியசாமி (37), மடத்தூரைச் சேர்ந்த ஆசீர்வாதம் மகன் மார்டின் (35), மானூரைச் சேர்ந்த அருமைராஜ் மகன் ஈசாக் (37), அந்தாேணி மகன் பிரனீஸ் (38), கனகராஜ் மகன் முத்துகுமார் (32) என்பதும் தெரியவந்தது.  எஸ்ஐ செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தார். அவர்களிடமிருந்து 2 பைக், 2 லிட்டர் கள்ளசாராயம், ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: