சமூக விடுதலைப் போராளி மைதிலி சிவராமன் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்க, பெண்கள் இயக்கத் தலைவருமான மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 81. கணவர் கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோருடன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மைதிலி சிவராமன் மறைவுக்கு பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்க, பெண்கள் இயக்கத் தலைவருமான மைதிலி சிவராமன் (81) கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது. வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன்  கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர். கீழ்வெண்மணிப் படுகொலைகள் நாட்டையே உலுக்கிய போது அங்கு சென்று உண்மைகளைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார். மைதிலி சிவராமன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): வாச்சாத்தியில் மலைவாழ் மக்களும், ஆதிவாசிகளும் அரசின் அட்டூழியங்களுக்கும், மிருகத்தன அடக்குமுறைக்கும் ஆளான போது அவர்களுக்கு நீதி கேட்டு உரத்த குரலில் முழங்கியவர். இடதுசாரி இயக்கம் ஆளுமை கொண்ட அறிவார்ந்த செயல்பாட்டாளரை இழந்து விட்டது. அன்னாரின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, அஞ்சலி செலுத்துகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்:  கீழ்வெண்மணி பிரச்சினை மட்டுமின்றி வாச்சாத்தியில் பழங்குடியினப் பெண்கள் பாதிக்கப்பட்ட நேரத்திலும் அதற்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மைதிலி சிவராமன். ஆங்கிலத்தில் அவர் எழுதிய சமூக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் தமிழகச் சூழலை வெளியுலகுக்கு கொண்டு செல்ல உதவின.  சிந்தனை, நடைமுறை என இரு தளங்களிலும் விளிம்பு நிலை மக்களுக்காக உழைத்த தோழர் மைதிலி சிவராமனின் மறைவு உழைக்கும் மக்களுக்குப் பேரிழப்பு.

Related Stories: