மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை பெற மாநில அரசுகள் போராட வேண்டியிருக்கிறது!: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகார்..!!

சென்னை: மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை பெறுவதற்கு மாநில அரசுகள் போராடும் சூழல் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். காணொலி  வாயிலாக நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக் கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பில் கற்பனை செய்யப்படாத அளவில், அதிகார மையமாக ஜி.எஸ்.டி. அமைப்பு செயல்படுவதாக விமர்சித்தார். ஜி.எஸ்.டி.யை அவசர கதியில் செயல்படுத்தியதால் அதில் அடிப்படை குறைபாடு இருப்பதாகவும் அவை தற்போது வெளிப்பட தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். 

மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை பெறுவதற்கு போராட வேண்டிய நிலை இருப்பதாக கூறிய அவர், நன்கொடையாளர் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படக்கூடாது என்றார். அவ்வாறு வேண்டா வெறுப்புடன் செயல்படுவது மத்திய அரசின் அடித்தளமாக உள்ள மாநிலங்களுக்கு எதிரான செயலாகும் என கூறினார். மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், மத்திய அரசுக்கு என தனியாக வாக்காளர்கள் இல்லை என காட்டமாக பேசினார். 

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை சமரசம் செய்வதில் கருணையின்றி செயல்படும் மத்திய அரசால் சீரழிவு ஏற்பட்டிருப்பதாக கூறினார். இந்த தருணத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை ஆழமாக மாற்றி அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியவை மீது தற்காலிக வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார். 

Related Stories: