அரசு பணம் ரூ.86 லட்சத்தை எடுத்து முன்னாள் அதிமுக அமைச்சரின் குலதெய்வ கோயிலுக்கு மண்டபம்: அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் தலைவர் சுமதி (அதிமுக) தலைமையில் துணைத்தலைவர் முத்துலட்சுமி (அதிமுக) முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுகவை சேர்ந்த 24 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் 64 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும், ஒன்றியத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை எனக்கூறியபடி வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் கூறியதாவது:

தேர்தலுக்கு முன்பாக ரோடு போடுவதாக கூறினர். ஆனால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குலதெய்வ கோயிலுக்கு ரூ.86 லட்சத்தை கவுன்சிலர்கள் ஒப்புதல் இல்லாமல் எடுத்து மண்டபம் கட்டி விட்டனர். கேட்டால் நாங்கள் வைத்தது தான் அதிகாரம், கவுன்சிலர்கள் இல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என கூறினர். இப்பவும் அதைப் போல் கவுன்சிலர்கள் இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என கூறி வெளியேறி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சரை பற்றி அக்கட்சி கவுன்சிலரே பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: