புதிய ஐ.டி. விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள்!: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் கூட்டமைப்பு கடிதம்..!!

டெல்லி: மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் புதிய வசதிகள் மின்னணு செய்தி ஊடகங்களுக்கு பொருந்தும் என்பது இரண்டாயிரம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு என தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பணியாளர்களின் குறைகளை தீர்க்க குழுக்களை அமைக்க வேண்டும் என்பது போன்ற விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய விதியால் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி செலவு ஏற்படுவதுடன் மனித வளம் தேவையின்றி வீணடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய விதிகளில் இருந்து செய்தி தொலைக்காட்சிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக செய்தி தொலைக்காட்சி ஒழுங்குமுறை விதிகளை வலுப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

Related Stories: