திண்டிவனம் அருகே பதுக்கி வைத்து விற்பனை 792 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: 4 பேர் கைது

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் மதுபானம் விற்பவர்களை கண்டறிந்து தொடர்ந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி கணேசன் மேற்பார்வையில், டிஎஸ்பி தனிப்படை போலீசார் அருள், அய்யப்பன், ஜனார்த்தனன், பூபாலன், செந்தில் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொடியம் கூட்டு பாதை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் எறையானூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சஞ்சீவி மகன் சதீஷ்குமார்(33) என்பதும் அவருடன் பைக்கில் வந்த புதுச்சேரி கிழக்கு சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த பழனி மகன் சிவகுமார்(55), என்பதும், அவர்கள் கொண்டு வந்த சாக்குமூட்டையில் 20 லிட்டர் விஷநெடி சாராயம் இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், புதுச்சேரியிலிருந்து போலி ஸ்டிக்கர் ஒட்டிய 180 மில்லி அளவு (குவாட்டர்) கொண்ட போலி மதுபாட்டில்கள் வாங்கிவந்து கீழ்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் அன்பழகன் என்பவருடன் சேர்ந்து அவர் குத்தகைக்கு பயிர் செய்யும் நிலத்தில் உள்ள புதர்களில் மறைத்துவைத்துள்ளனர். பின்னர் அவற்றை வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்த காளி மகன் ரவி(47) என்பவருடன் சேர்ந்து அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 34 அட்டை பெட்டிகளில் இருந்த 792 மது பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் விஷநெடி சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சதீஷ்குமார், சிவகுமார், அன்பழகன், ரவி ஆகிய4 பேரையும் கைது செய்தனர்.

புதுவையிலிருந்து மதுபாட்டில்கள்

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், போலி மதுபானங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து100 அட்டைப் பெட்டிகளில் சுமார் 2500 மதுபாட்டில்களை வாங்கிவந்து, அதில் 65 அட்டைப் பெட்டிகளில் இருந்த சுமார் 1700 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்ததாகவும், மீதமுள்ள 34 அட்டைப்பெட்டிகளில் இருந்த 792 மதுபாட்டில்கள் தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: