திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். 108 வைணவ திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர், இரவு 7 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். அப்போது, அங்கிருந்த பக்தர்கள் ‘‘கோவிந்தா’’ ‘‘கோவிந்தா’’ என்ற முழக்கத்துடன் ஏழுமலையான பக்தியுடன் வணங்கினர்.

Related Stories: