செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு விட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்: மத்திய அமைச்சரிடம் தொழில் துறை அமைச்சர் நேரில் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனே தொடங்க, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சரிடம் தமிழக தொழில்துறை அமைச்சர் நேரில் வழங்கினார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நேரத்தில் பொதுமக்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், வாசலுக்கு வெளியே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் வாங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. கூடுதலாக மருத்துவமனைகளும், படுக்கைகளும் உருவாக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இடம் இல்லை என்ற நிலை 10 நாட்களில் மாற்றியமைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப்போல, கொரோனா தடுப்பூசியை வாங்கி, மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் நேற்று மட்டும் 3 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியை வாங்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். அதன் ஒருகட்டமாக, செங்கல்பட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அந்த நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து குத்தகைக்கு பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி  இருப்பதாவது: கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக மத்திய அரசுக்கு நன்றி. தொற்றுக்கு எதிராக நடக்கும் போரில், மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதுதான் நமக்கு கிடைத்திருக்கும் முக்கிய ஆயுதமாகும்.

எனவே உள்ளூரிலேயே தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. இது, பிரதமரின், சுயசார்பு இந்தியா நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும். சென்னை அருகே செங்கல்பட்டில் நவீன மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (ஐவிசி) அமைந்துள்ளது. மத்திய சுகாதார துறைக்கு கீழ் வரும் எச்.எல்.எல். பயோடெக் (எச்.பி.எல்.) நிறுவனம் மூலம் ஐ.வி.சி. நிறுவப்பட்டது. அந்த வளாகம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. அங்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி வசதிகளை உருவாக்க ஏற்கனவே மத்திய அரசு ரூ.700 கோடி முதலீடு செய்துள்ளது. அதற்கான பணிகள் ஏறக்குறைய முழுவதும் முடிந்துவிட்டன. ஆனால் கூடுதல் நிதி தேவைப்படுவதால் அந்த நிறுவனம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

அந்த நிறுவனத்தை இயக்குவதற்காக தனியார் பங்குதாரரை இணைத்துக் கொள்வதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் நன்மைக்காக அங்குள்ள நவீன வசதிகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நான் மிகுந்த விருப்பம் கொண்டிருக்கிறேன். இது, தேசிய தடுப்பூசி மருந்து உற்பத்தி திறனை அதிகமாக உயர்த்தும். தமிழகம் உள்ளிட்ட தேசத்தின் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும். ஐவிசி நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தையும் மாநில அரசுக்கு குத்தகையாக வழங்க வேண்டும். அதை இயக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அதை தொடர்ந்து, தகுதியான தனியார் பங்குதாரரை மாநில அரசு அடையாளம் கண்டு, தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கும்.தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கியதும், மத்திய அரசு முதலீட்டை மீட்பதற்கான நிதி அடிப்படையிலான ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.

எனவே இதில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, எச்பிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ஐ.வி.சி.யின் சொத்துகளை தமிழக அரசுக்கு கைமாற்றவும், அதன்மூலம் விரைவில் தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து நேற்று கொடுத்துள்ளனர்.

* தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டில் தடுப்பூசி மருந்து உற்பத்தி வசதிகளை உருவாக்க மத்திய அரசு ₹700 கோடி முதலீடு செய்துள்ளது. கூடுதல் நிதி தேவைப்படுவதால் அந்த நிறுவனம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

* ஐவிசி நிறுவனத்தின் சொத்துகளை மாநில அரசுக்கு குத்தகையாக வழங்க வேண்டும். அதை இயக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

Related Stories: