செப்டம்பரில் மீண்டும் ஐபிஎல் அமீரகத்தில் நடத்த முடிவு

புதுடெல்லி: கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட நடப்பு ஐபிஎல் டி20 தொடர், செப்டம்பர் மாதம்   ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடத்த  பிசிசிஐ  முடிவு செய்துள்ளது. ஐபிஎல் 14வது சீசன் ஏப். 9ம் தேதி தொடங்கியது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மே 4ம் தேதி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. எஞ்சிய ஆட்டங்கள் எப்போது நடக்கும் என்பது உறுதியாக தெரியாத நிலை இருந்தது.   அதனால் ஐபிஎல் தொடரில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள்  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில்  எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை  அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.   அதன்படி இங்கிலாந்து சுற்றப்பயணம் முடிந்ததும்  செப்டம்பர் 18 அல்லது 19ம் தேதி அமீரகத்தில்  நடப்பு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கும். இறுதிப்போட்டி அக்டோபர் 9 அல்லது 10ம் தேதி நடக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து ஐபிஎல் அணி நிர்வாகங்களுடன் பிசிசிஐ பேசி வருகிறது. அமீரகத்தில் டி20 உலக கோப்பை: இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியா வர அச்சப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முடிந்ததும்,   அங்கேயே டி20 உலக கோப்பை போட்டியும் நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Related Stories: