தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 163 டன் ஆக்சிஜன் உற்பத்தி: 10 மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 163 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 10 மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதையொட்டி ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கடந்த 12ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

ஆனால் 13ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 19ம் தேதி முதல் மீண்டும் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முதலில் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட மேற்கு, வட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. முதலில் ஆலையில் 4.8 டன் அளவில் இருந்த ஆக்சிஜன் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து, நேற்றுமுன்தினம் 29 டன் என்ற அளவை எட்டியது. முதலில் இரு தினங்கள் 2 டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது.

பின்னர் 3 டேங்கர்களாக உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம் 5 டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று 28.18 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 7.80 டன்னும், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 2.50 டன்னும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு 2.50 டன்னும், ராணிபேட்டை காவேரி கார்போனிக்ஸ் மருத்துவமனைக்கு 6.12 டன்னும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 7.26 டன்னும், மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு 2 டன்னும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 163.18 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்ப்ததி செய்யப்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, தேனி, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இத் தகவல் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: