கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்கின்ற ‘ஆஷா’ தொழிலாளர் நிலை மோசம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்கின்ற ‘ஆஷா’ தொழிலாளர்களின் நிலைமை மோசமாக இருப்பதால், அவர்களின் நிலைமை குறித்து அறிக்கை சமர்பிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு  அனுப்பியுள்ள நோட்டீசில், ‘கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்கின்ற ‘ஆஷா’ தொழிலாளர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த சுகாதார மேலாண்மை அமைப்பை செயல்படுத்தும் பணியானது ஆஷா தொழிலாளர்களை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் தொற்றுநோய் காலத்திலும் பணியாற்றும் இவர்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படி, புகாரில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆறு வாரங்களுக்குள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை ஆஷா தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்? தொற்றுநோய் காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்ன? பிற நிலுவைத் தொகைகள் விபரம் என்ன? தொழில்முறையில் அவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். அவர்களின் சுகாதாரத் தேவைகளைப் பாதுகாக்க, ஆஷா தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் வசதிகள், உயிரிழப்புகள் ஏற்பட்டால் இழப்பீடு, நீண்டகால சுகாதார காப்பீடு மற்றும் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு வசதிகள் ஆகியன குறித்தும் விளக்க வேண்டும்’ என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: