3 லட்சம் செடிகள், 10,000 பூந்தொட்டிகள் தயார்: கொரோனா ஊரடங்கால் ஏற்காடு கோடைவிழா ரத்து

சேலம்: சேலத்தில் 3 லட்சம் செடிகள், 10 ஆயிரம் பூந்தொட்டிகள் தயாரான நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்காடு  கோடை விழா தொடர்ந்து 2வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஏற்காடு விளங்குகிறது. இங்கு, அண்ணா பூங்கா, படகு இல்லம், மான்  பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன்  மலைக்கோயில் உள்பட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன. இதனால் சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற  மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை மிகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.  அப்போது அண்ணா பூங்காவில் கண்கவர் மலர் கண்காட்சி, படகு போட்டி, கொழுகொழு குழந்தை போட்டி, சமையல் போட்டி, நாய்  கண்காட்சி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.  கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, கோடை விழா நடத்தப்படவில்லை. தொடர்ந்து நடப்பாண்டு தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்ததால், இந்த ஆண்டு கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.  

இதனையடுத்து, கடந்த 3 மாதத்திற்கு முன்பே தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான  பூச்செடிகள், பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன. நடப்பாண்டு 3 லட்சம் செடிகளும், 10 ஆயிரம் பூந்தொட்டிகளும் தயார்  செய்யப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா 2வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 2வது முறையாக நடப்பாண்டும் கோடை விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘நடப்பாண்டாவது கோடை விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்பில், மேரி கோல்டு, ஜினியா,  காஸ்மாஸ், ஆந்தூரியம், கிரிசோந்தியம், சன்பிளவர், கைஜீனியா உட்பட 30க்கும் மேற்பட்ட வகை பூச்செடிகள் தயார் செய்யப்பட்டன.  தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் கோடை விழாவை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து பழைய நிலைக்கு திரும்பினால் போதும் என எதிர்பார்க்கிறோம்,’’என்றனர்.

விழிப்புணர்வுக்கான பூந்தொட்டி அமைப்பு

ஏற்காடு கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால், அண்ணா பூங்கா, மான் பூங்கா ஆகியவை மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  மலர்  கண்காட்சிக்காக அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘‘ஸ்டே ஹோம்’’ என்ற எழுத்து வடிவில்  பூந்தொட்டிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: