கவர்னருக்கு லெட்டர் போட்டும் பலன் இல்லை தினமும் எங்கள்ல சில பேரு சாகறாங்க...தரமான பி.பி.இ. கிட் கிடைக்கல...புதுச்சேரி தலைமை நர்ஸ் கண்ணீர் ஆடியோ : வாட்ஸ்அப்பில் வைரலானதால் பரபரப்பு

புதுச்சேரி: ‘‘கவர்னருக்கு லெட்டர் போட்டும் பயனில்லை. தினமும் எங்கள்ல சிலர் சாகறாங்க, எங்களுக்கு ஊக்கத்தொகை கூட வேணாம், உயிர் காக்க நல்ல கவச உடை தாங்க’’ என்று புதுச்சேரி அரசு மருத்துவமனையின் தலைமை நர்ஸ் கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டாக்டர், நர்ஸ்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் முன்கள பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதேபோல், புதுச்சேரியிலும் முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு கவச உடை உள்ளிட்டவை முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும், நர்ஸ்களுக்கு போதிய பணி பாதுகாப்பு இல்லாததால் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்தநிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையின் தலைமை நர்ஸ், ‘‘தங்களுக்கு தரமான கவச உடை வழங்கப்படவில்லை’’ என கண்ணீருடன் பேசியுள்ளார். அவரது கண்ணீர் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது:- எங்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை. தரமான பி.பி.இ. கிட் வாங்கி கொடுத்தா போதும். நான் சுகாதாரத்துறை அதிகாரிகள், கவர்னருக்கு எல்லாம் லெட்டர் போட்டுட்டேன். எங்களுக்கு தரமான பி.பி.இ.  கிட் கிடைக்கவே இல்ல. இப்ப இருக்கிற பி.பி.இ.  கிட்ட ஒரு மணி நேரம்கூட போட முடியல. 1 மணி நேரம் கழிச்சி மூச்சு திணறல் வந்து பசங்க (நர்ஸ்கள்) கிட்டை கழற்றிடறாங்க. நாங்க எவ்ளோதான் மன்றாடுவது?

ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறோம். இங்க நடக்கிறத வெளிய சொல்லக்கூடாதுன்னு எவ்வளவு நாள்தான் இருக்கிறது. சாதாரண நாளுன்னா நாங்க ஸ்டிரைக் பண்ணுவோம். இந்த நேரத்தில் பண்ணுனா மக்கள் என்ன சொல்வாங்க? இவுங்க பிரச்னைக்காக மக்கள பார்க்காம பண்றாங்கன்னு எங்கள குறை சொல்வாங்க. அதனால, எங்களுக்கு ஊக்கத்தொகை வேணாம். போனஸ் வேணாம். உயிர் பாதுகாப்பு தந்தா போதும். நாங்க வேலை செய்யத்தான் வந்தோம். நிச்சயம் செய்வோம். அதுக்கு நல்ல கவச உடை வேணும். இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போறாங்கன்னு தெரியல. தினமும் எங்கள்ல சில பேர் சாவுறாங்க. எனவே, நீங்க எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு பி.பி.இ.  கிட் வாங்கி கொடுக்க இந்த கவர்மென்ட்கிட்ட வலியுறுத்துங்க. அது

போதும். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

Related Stories: