பாலியல் வழக்கில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை

பனாஜி: பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலை விடுதலை செய்து கோவா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2013ம் ஆண்டு நவம்பரில் கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால், சக பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து தருண் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தன் மீதான பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் மும்பை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோவா நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷாமா ஜோசி, குற்றச்சாட்டு ஆதாரமின்றி நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து தருண் தேஜ்பாலை விடுவித்து உத்தரவிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ‘‘கோவாவில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: