கோவிட் டூல்கிட் விவகாரம்: டிவிட்டருக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமானதற்கு காரணமே பிரதமர் மோடி தான் என வெளிநாட்டு பத்திரிகைகள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுபோல, வெளிநாட்டில் பிரதமர் மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்த காங்கிரஸ் தனியாக டூல்கிட் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பொய் செய்திகளை பரப்பி வருவதாக பாஜ செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டிவிட்டரில் குற்றம் சாட்டி இருந்தார். இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் என கூறப்படும் ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.  இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரப்புவது குறித்து டிவிட்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் டிவிட்களை ஆய்வு செய்த டிவிட்டர் நிறுவனம், சம்பித் பத்ராவின் கோவிட் டூல்கிட் டிவிட்களின் கீழ் ‘சித்தரிக்கப்பட்ட தகவல்’ என நேற்று டேக் செய்தது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

‘சித்தரிக்கப்பட்ட தகவல்’ என்பதை உடனடியாக நீக்க வேண்டுமென டிவிட்டருக்கு அழுத்தமும் தரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், டூல்கிட் குறித்த உண்மைத்தன்மையை விசாரணை ஆணையம் முடிவு செய்யும் எனவும், இதுபோன்ற செயலில் டிவிட்டர் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கொ ரோனா பரவலை தடுப்பதில் கவனம் செலுத்தாமல், தனக்கு எதிரான செய்திகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்குவதிலேயே மத்திய அரசு அக்கறை காட்டுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தநிலையில், டிவிட்டருக்கும் அழுத்தம் தந்திருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் கூறி உள்ளது.

Related Stories: