தேஜஷ்வி ஒதுக்கிய கொரோனா வார்டு விவகாரம்; பேசுனா... என் சகோதரிகள் குத்துவார்கள்!: மாஜி துணை முதல்வரை தாக்கிய லாலு மகள்

பாட்னா: பீகாரில் கொரோனா பாதிப்பு, மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசுக்கும், எதிர்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், லாலுவின் மகனும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவ், தனது அரசு இல்லத்தை கொரோனா பராமரிப்பு வார்டாக மாற்றி அமைத்துள்ளார். இதற்கு சமூக ஊடகங்களில் சிலர் புகழ்ந்தும், சிலர் கேள்விகளையும் எழுப்புகிறார்கள். இதற்கிடையில், முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடிக்கு எதிராக, லாலுவின் மகளான ரோகிணி ஆச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுஷில் மோடி வெளியிட்ட பதிவில், ‘தேஜஷ்வி யாதவ், சட்டவிரோதமாக வாங்கிய தமது வீடுகளை கொரோனா பராமரிப்பு வார்டுகளாக திறக்க வேண்டும். எம்பிபிஎஸ் படித்த அவரது இரண்டு சகோதரிகளும், ஏன் கொரோனா ேநாயாளிகளுக்கான சேவையில் ஈடுபடவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள ரோகிணி, ‘நீங்கள் என் பெயரையோ அல்லது என் சகோதரிகளின் பெயரையோ பயன்படுத்தினால், அவர்கள் உங்கள் முகத்தில் குத்துவார்கள். உங்கள் காதுகளை நன்றாக திறந்து வைத்து கேளுங்கள். எனது சகோதரர் பொதுமக்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, திரைப்பட தயாரிப்பாளரும், எழுத்தாளருமான அவினாஷ் தாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘தேஜஸ்வி யாதவ் சட்ட விரோதமாக டஜன் கணக்கான வீடுகளை வைத்துள்ளார் என்று கூறுகின்றீர். அப்படியென்றால், ஏன் நீங்கள் (சுஷில் மோடி) நடவடிக்கை எடுக்கக்கூடாது? தற்போது உங்களது ஆட்சிதானே நடக்கிறது. பொய் சொல்லாதீர்கள். உங்களால் சேவையைச் செய்ய முடியாவிட்டால், குறைந்தபட்சம் இந்த நேரத்தில் அழுக்கு அரசியல் செய்ய வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: