கொள்ளிடம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபான பாட்டில்கள் திருட்டு-மர்ம நபர்களுக்கு வலை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கொப்பியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மது பாட்டில்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் கடந்த 10ம் தேதியிலிருந்து வருகின்ற 24ம் தேதி வரை இயங்காது என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனால் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுபான கடையின் பின்பக்க சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் கையை உள்ளே விட்டு அங்கு வைத்திருந்த 67 குவார்ட்டர் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். மது பாட்டில்களின் மதிப்பு ரூ.11390 என்று கூறப்படுகிறது.

தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அரசு மதுபான கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் வெளியில் நின்றவாறு நூதன முறையில் மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து கடையின் சுவற்றில் திருடுவதற்கு உருவாக்கப்பட்ட துளை சிமென்ட் கான்கிரீட் வைத்து டாஸ்மாக் ஊழியர்களால் அடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: