தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்குங்கள்!: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வரும் 24ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் செய்வதறியாது திணறி வருகின்றன. 

ஆம்புலன்ஸிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலமும் நீடித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். கொரோனாவின் தாக்கம் உயர்வதால் கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்குங்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு அருகே இருக்கக்கூடிய ஆலையில் 300 கோடி முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பு பணியை தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்திருக்கிறார். ஏற்கனவே தமிழகத்திற்கு ஆக்சிஜன் அளவீட்டை அதிகரிக்க வேண்டும் என அவர் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: