‘சிங்கப்பூர் வைரஸ்’ என்றதால் சர்ச்சை இந்தியாவின் பிரதிநிதி போல் பேசக்கூடாது: டெல்லி முதல்வருக்கு மத்திய அரசு கண்டனம்

புதுடெல்லி: சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரசால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதை ‘சிங்கப்பூர் வகை வைரஸ்’ என குறிப்பிட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ‘‘சிங்கப்பூர் வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3வது அலை இந்தியாவில் உருவாகலாம். எனவே, உடனடியாக சிங்கப்பூர் விமான சேவையை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’’ என நேற்று முன்தினம் பேட்டி கொடுத்தார்.இது பெரும் சர்ச்சையானது. சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘சிங்கப்பூரில் எந்த புதிய வகை கொரோனாவும் உருமாற்றம் அடையவில்லை. இங்கு பரவியுள்ள வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்ட பி 1.617.2 வகையை சேர்ந்தது’’ என்றார். மேலும், சிங்கப்பூர் அரசு அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரனை அழைத்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

இதையடுத்துமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, விரைவாக ஆக்சிஜன் சப்ளை செய்த சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. இதைப்பற்றி எல்லாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவைச் சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டெல்லி முதல்வர் பேசக்கூடாது” என எச்சரித்துள்ளார். சிசிசோடியா பதில் இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசிசோடியா கூறுகையில், ‘‘நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறோம். மத்திய அரசுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. தனது பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என பார்க்கிறது.’’ என்றார்.

Related Stories: