வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் அரசு முனைப்போடு செயல்படுத்துகிறது: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை:கொரோனா 2ம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். முதல்கட்டமாக 1,250 பேர்  சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன், தயாநிதி மாறன் எம்.பி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் திட்டக்குடி கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கென, மாநில தொழிலாளர்கள் ஆணையத்தில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு அதை கண்காணிக்க 2 பேர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். அதேபோல் மாவட்ட அளவிலும் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டு, உணவு வழங்குப்பட்டு எந்தவித பாதிப்பும் வராமல் அவர்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கட்டுமான தொழில், கெமிக்கல் உள்ளிட்ட தொழில்துறைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள், குறிப்பாக கட்டுமான தொழிலில் சுமார் 13 லட்சம் பேர் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. அதுபோல் தகுதியான, பதிவு செய்யப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 27,42,097 பேர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: