ஐசியு வார்டில் சிகிச்சை பெற்ற தந்தை கட்டண பாக்கிக்கு ‘ஸ்கூட்டி’யை பிடுங்கி கொண்ட மருத்துவமனை: ராஜஸ்தானில் கொடுமை

ஜெய்ப்பூர்: ஐசியு வார்டில் சிகிச்சை பெற்ற தந்தையை விடுவிக்க கட்டண பாக்கியால் ‘ஸ்கூட்டி’யை மருத்துவமனை நிர்வாகம் பிடுங்கிக் கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பிரதாப் நகரைச் சேர்ந்த மோகன் சிங் (53) என்பவர், கடந்த 7ம் தேதி மகாவீர் காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரை ஐசியு வார்டில் அனுமதிக்க வேண்டும் என்றும், கட்டணமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

மருந்துகள் மற்றும் சோதனைகள் தனித்தனியாக கட்டணம் கட்டவும் அறிவுறுத்தியது. அதன்படி, கடந்த 6 நாட்களாக ஐசியு வார்டில் மோகன் சிங் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து அவரது மகன் ஹேமந்த் ராவத் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார். ஆறு நாட்களாக சிகிச்சை பெற்றதற்கான பில் தொகை, 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதில், 1,18 லட்சம் ரூபாயை செலுத்திய பின்னர் மீதமுள்ள 65 ஆயிரம்  ரூபாயை செலுத்த கையில் பணம் இல்லை. அதேநேரம் அவரது தந்தையின் உடல்நிலையும் மோசமடைந்து வந்தது.

இருந்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சி கூத்தாடி, தனது தந்தையை வேறு மருத்துவமனையில் அனுமதித்தாக வேண்டும் என்று ஹேமந்த் ராவத் வலியுறுத்தினார். இதற்கு, மருத்துவமனை நிர்வாகம் மீதமுள்ள கட்டண பாக்கி தொகையான 65 ஆயிரம் ரூபாயை செலுத்துவதற்கு பதிலாக, ஹேமந்த் ராவத்தின் ஸ்கூட்டி பைக்கை அடமானமாக வாங்கிக் கொண்டு நோயாளியை விடுவித்தது. அதன்பின், 12ம் தேதி மோகன் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், ஜோத்வாராவில் அமைந்துள்ள மருதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர்கள் ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்க ரூ.50,000 டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

பணவசதி இல்லாததால், வீட்டிற்கு தனது தந்தையை அழைத்து வந்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை மோகன் சிங்குக்கு கிடைத்தது. தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ கட்டண பாக்கிக்காக நோயாளியின் மகனிடம் ஸ்கூட்டி பைக்கை பிடுங்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: