தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் பேச்சு

ஜெருசலேம்,: அஷ்கெலான் நகரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண்ணின் குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் பேசினார். மேற்கு ஆசிய நகரான ஜெருசலேத்தில் உள்ள அக் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இஸ்ரேல் படையினர் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காசா போர் முனையை வசப்படுத்தியுள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில், இஸ்ரேலின் அஷ்கெலான் நகரில் இருக்கும் குடியிருப்பு ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் வயதான பெண்ணின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரத்தோடு பகுதியை சேர்ந்த சவுமியா சந்தோஷ் (31) என்பவர் உயிரிழந்தார். கடந்த 7 ஆண்டாக இஸ்ரேலில் பணியாற்றி வந்த சவுமியாவுக்கு, 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டு ஆண்டுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா, இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலிய அதிபர் ருவன் ரிவ்லின், இந்திய நேரப்படி நேற்று மாலை இடுக்கியில் உள்ள சவுமியா குடும்பத்தினருடன் பேசி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர், அவர்களுடன் நடத்திய உரையாடலின் விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், அதிபர் ருவன் ரிவ்லின் ஆலோசகர், சவுமியா குடும்பத்தினருடன் அதிபர் பேசியதை உறுதிப்படுத்தினார். இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டாக்டர் ரான் மல்காவும், சவுமியா குடும்பத்தினருடன் ஆறுதல் கூறுவதற்காக கடந்த வாரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: