கொரோனா 2ம் அலை தாக்கத்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆதரவு கடும் சரிவு!: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்..!!

வாஷிங்டன்: கொரோனா 2ம் அலையால் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆதரவு கடுமையாக சரிந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமரான நரேந்திர மோடி, 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் வென்று மீண்டும் பிரதமரானார். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் ஆட்சி அமைத்தார். இதனால் அவர் மிகசக்தி வாய்ந்த தேசிய தலைவர் என்ற சித்திரம் உருவானது. 

இந்நிலையில் கொரோனா 2ம் அலை தீவிரமும் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் மோடி மீதான மதிப்பீட்டை குறைத்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தரவுகள் புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் உலக தலைவர்களின் மக்கள் செல்வாக்கு குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரத்தில் இந்தியாவில் 2.5 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம், மோடி மீதான மதிப்பீடு கடந்த வாரத்தில் 63 விழுக்காடாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

அதாவது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மோடியின் செல்வாக்கில் 22 புள்ளிகள் சரிந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு கொரோனா பெருந்தொற்றை முறையாக கையாலாளதே முக்கிய காரணம் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், மயான காட்சிகளும், சாலைகளில் நோயாளிகள் அவதியுறும் காட்சிகளும் மோடியின் செல்வாக்கில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு முதல் அலையின் போது நடத்தப்பட்ட ஆய்வில், அரசு சிறப்பாக செயல்படுவதாக 89 விழுக்காட்டினர் தெரிவித்ததாகவும், இது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 59 விழுக்காடாக சரிந்துள்ளதாகவும் மார்னிங் கன்சல்ட் கூறியுள்ளது.

Related Stories: