கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கிய பிறகு ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு  ₹1 கோடி அளிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து, அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், செய்தி தொடர்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட அதிமுக செயலாளர் பாலகங்கா ஆகியோர் சென்னை, தலைமை  செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்புவை நேற்று சந்தித்து நிவாரண நிதி வழங்கினர். பின்னர் தலைமை செயலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்புக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும்.

ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நிச்சயமாக எங்களின் பங்களிப்பு என்பது கொரோனா நோய்  தடுப்பு நடவடிக்கையில் இருக்கும். அதே நேரத்தில் மக்கள் பாதிக்கின்ற எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதிமுக முழுமையான அளவிற்கு குரல் கொடுக்கும். அந்த அடிப்படையில் குழு அமைக்கப்பட்டது வரவேற்கக்கூடிய விஷயம்தான். உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற  வகையில் முழு வீச்சோடு அரசு செயல்பட்டால் மரணத்தை தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: