ஊரடங்கால் பணியாளர்கள் வருவதில் சிக்கல்: முழு ஊரடங்கு முடிந்த பிறகு கோயில் விவரங்களை தருகிறோம்: திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்கள் அனைத்தும் தமிழக முழுவதும் உள்ள அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் செயல் அலுவலர்கள் பணியாற்றும் அனைத்து முதன்மை கோயில்களிலும் கணினி வசதி  ஏற்படுத்தாததால் அனைத்து கோயில்களில் இருந்தும் முழுமையான விவரம் கிடைக்கப் பெறப்படுவதில்லை. செயல் அலுவலர்கள் பணியாற்றும் அனைத்து முதன்மை கோயில்களிலும் கணினி வசதி ஏற்படுத்தி, கணினி இயக்குபவர் பணியிடம்  உருவாக்கி, அப்பணியிடத்தில் ஒருவரை நியமிக்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், துறையில் இருந்து கோயில் பற்றிய விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர்களுக்கு தொடர்ந்து பல முறை மின்னஞ்சல்  மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டுமென்றால் கோயில் பணியாளர்கள் பணிக்கு வந்து விவரங்கள் வழங்க வேண்டி உள்ளது. தற்போது பேருந்து வசதி இல்லாத நிலையில் கோயிலில் இருந்து  சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் வருகை தரும் பணியாளர்கள், சிரமத்திற்கிடையே கோயிலுக்கு வருகை தந்து விவரங்கள் தர வேண்டியுள்ளது. தற்போது கேட்கப்பட்டு வரும் கோயில் பற்றிய மின்னஞ்சல் விவரங்களை ஊரடங்கு விலக்கி  கொள்ளப்பட்ட பிறகு கேட்கும் போது முழுமையாக அளிக்க தயாராக உள்ளோம்.

Related Stories: