மக்கள் பிரதிநிதிகளை நிராகரித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டம் புறக்கணிப்பு: அரசு முடிவுக்கு முத்தரசன் வரவேற்பு

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பது வரவேற்க்கத்தக்கது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய்த் தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் சூழலில் ஒன்றிய அரசு புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் மாநில கல்வித்துறை அதிகாரிகளின் காணொலிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இந்த கூட்டத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் பள்ளிகளை இயக்குவது புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது போன்ற முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு மாநில கல்வி அமைச்சர்கள் அழைக்கப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் நிராகரித்து அதிகாரிகள் மூலம் கல்வித்துறையை நிர்வாகிக்க ஒன்றிய அரசு முயல்வது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானது. அதிகார அத்துமீறலாகும். இந்த நடைமுறையை எந்த வகையிலும் ஏற்க இயலாது. கூட்டாட்சி கோட்பாட்டை சிதைக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய கல்வி அமைச்சர் நடத்தும் காணொலிக் கூட்டத்தில் மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்து செயல்படுத்தியிருப்பது வரவேற்கதக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: