கொரோனா சிகிச்சை கட்டணம் ரூ3 லட்சம்; மனைவி உயிரை காக்க வீட்டை விற்ற கணவன்: மருத்துவமனையின் கட்டாய வசூலால் தவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் கொேரானா சிகிச்சை கட்டணமாக ரூ. 3 லட்சம் கேட்டதால், தன்னுடைய வீட்டை விற்று கொடுத்த கணவன், மனைவியை ேவறொரு மருத்துவமனையில் சேர்த்தார். மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் பகுதியை சேர்ந்த சுமித்ரா சிக்கானே (55) என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் கணவர் வினோத் கோடோங்ரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மனைவியை அனுமதித்திருந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்தி அடையாத வினோத், தனது மனைவியை பெத்துலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அனுமதித்தார்.

தொடர்ந்து 13 நாட்கள் சிகிச்சையில் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை மேம்படவில்லை. இருந்தும் மருத்துவமனை நிர்வாகம், 13 நாட்களாக பார்த்த மருத்துவ சிச்சைக்கான கட்டணமாக ரூ.3 லட்சம் கேட்டது. பதற்றமடைந்த வினோத், தனது மனைவியின் உயிரை காக்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை விற்க முடிவு செய்தார். அதற்காக மூன்று அறைகள் கொண்ட வீட்டை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்றார். இருந்தும் மருத்துவ செலவிற்கான பணம் போதாது என்பதால், தனது உறவினர்கள் மூலம் 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு, மூன்று லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்திவிட்டு, நோய்வாய்ப்பட்ட தனது மனைவியை கடந்த 9ம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை, எந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்று ஒரே குழப்பத்தில் இருந்தார். அந்த நேரத்தில், அவரது நண்பர் கொடுத்த ஆலோசனையின்படி ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் தனது மனைவியை சேர்த்தார். நேற்று வரை, தனியார் மருத்துவமனையில் சரியாக சுவாசிக்க முடியாமல் தவித்து அவர், தற்போது ஒரு நாளில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சுமித்ராவை குணப்படுத்த முடியும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் சில தனியார் மருத்துவமனைகள், விதிமுறை மீறி கட்டணம் வசூலிப்பதால் பலரது குடும்பங்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: