ராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மே 21ம் தேதி  கொரோனா விதிகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். கூட்டம் கூடி அஞ்சலி செலுத்துவதை  கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.   நினைவு நாளை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக எனது தலைமையில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களை கூறினார்கள்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் மே 21ம் தேதி நடைபெறவுள்ள ராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு நாளில் தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முக கவசங்களை விநியோகம் செய்வதென இலக்கு  நிர்ணயிக்கப்பட்டதோடு, கொரோனா நிவாரண பணிகளை அன்று மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் முகக் கவசங்களை  மே 21 முதல் விநியோகிக்க வேண்டும். மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முகக்கவசங்களை வழங்க வேண்டும்.  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவதை காங்கிரஸ் கட்சியினர் மக்கள் இயக்கமாக நடத்த  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: