கொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் போது, பிரதமருக்கு 13 ஆயிரம் கோடி ரூபாயில் வீடு அவசியமா  என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மே 11ம் தேதி வரை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 18 கோடி தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு டோஸ் போட்டவர்கள் மொத்த மக்கள் தொகையில் 19 சதவிகிதம். இதில் 2 டோஸ்கள் போட்டவர்கள் 4 சதவிகிதம் மட்டுமே. இந்நிலையில், மீதியிருக்கிற 80 சதவிகித மக்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநிலங்கள் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா முதல் அலையை வெற்றி கண்டுவிட்டோம் என்று மார்தட்டிய மோடி, இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நழுவிவிட்டது மிகப் பெரிய துரோகமாகும். இன்று மிகமிக மோசமான நிலையை நோக்கி நாடு போய்க் கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் தலையில் சுமையை ஏற்றாமல், மத்திய அரசே நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை வழங்க வேண்டும். அதுதான் கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கு நல்லது.

ரோம் நகரம் பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனா எனும் கொடுந்தொற்றில் கொத்துக் கொத்தாக மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும் போது, பிரதமருக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் வீடு அவசியமா, ரூ.20 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்தா திட்டம் அவசியமா, மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கால் கொரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>