108 ஆம்புலன்ஸ் சுமையை குறைக்க 15 மண்டலங்களில் கொரோனா நோயாளிகளுக்காக 250 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை: மாத்தி யோசித்த சென்னை மாநகராட்சி; ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் பாராட்டு

சென்னை: 108 ஆம்புலன்ஸ்களின் சுமையை குறைக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 250 சிறப்பு ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி கொரோனா நோயாளிகள் வீட்டிலிருந்து மருத்துவமனைகளுக்கோ, கொரோனா சிகிச்சை மையங்களுக்கோ செல்லலாம். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர் டிவிட்டரில் பாராட்டியுள்ளார். சென்னையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதோர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு அந்த ஆம்புலன்சிலேயே ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.

மருத்துவர்களும் ஆம்புலன்சில் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் நாள் கணக்கில் ஆம்புலன்சில் நோயாளிகள் இருப்பதாகவும், புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாததால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ககன்தீப் சிங் பேடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை நேற்று அறிமுகம் செய்தனர்.

இந்த புதிய திட்டத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். அதாவது கார்களில் ஆம்புலன்ஸ் வசதிகளை மேற்கொள்வது, இதற்கு சிறப்பு ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களின் சுமையை குறைக்கவும் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ்கள் உதவும். சுமார் 15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவைகள் இயக்கப்படும். இதன்மூலம் இனி நோயாளிகள் வீட்டிலிருந்து மருத்துவமனைகளுக்கோ கொரோனா சிகிச்சை மையங்களுக்கோ செல்லலாம். இந்நிலையில் ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘நல்ல முன் முயற்சி, இந்த சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் நேரத்திற்கு நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர்களை காக்க முடியும். ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது அதிக பாரத்தை ஏற்றாமல் மற்ற வாகனங்கள் குறித்து யோசித்து புதுமையை புகுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Related Stories:

>