சென்னை நேரு ஸ்டேடியத்தில் 4 கவுன்டர்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் மக்கள் நலன் கருதி இன்று முதல் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 4 கவுன்டர்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளதாக மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 2 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமானதால் அங்கிருந்து மருத்துவமனைக்கு எதிரே உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டது.

அங்கு நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகமானதால் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே வந்து காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் வருவதால் மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் விற்பனை மையம் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும், இன்று முதல் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 4 கவுன்டர்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளதாக மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: