கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மேலும் 2 பேர் கைது: 147 மருந்துகள் பறிமுதல்

சென்னை: வண்டலூர் பகுதியில் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த பார்மசி ஊழியர் விஷ்ணுகுமாரை  தனிப்படை போலீசார் சமீபத்தில் கைது செய்து, அவரிடமிருந்து 7 ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தனர். இவர் அளித்த தகவலையடுத்து கோவில்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்து விசாரித்த போது பெங்களூருவில் மொத்த வியாபார கடையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி ரூ.3000 விஷ்ணுவிடம் விற்பதாகவும், விஷ்ணு சென்னையில் ரூ.20 ஆயிரம் வரை மருந்தை விற்பனை செய்து வருவதாகவும் கூறினார். மேலும் சண்முகம் அளித்த தகவலையடுத்து நெல்லை, மதுரை ஆகிய இடங்களிலும் அந்தந்த மாவட்ட போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.

விஷ்ணு, சண்முகத்திடம் வாங்கியது போல் பல பேரிடம் கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விஷ்ணு அளித்த தகவலின் பேரில் பாரிமுனையில் மருந்து கடை வைத்துள்ள புவனேஷ் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த நித்திஷ் ஆகிய இரண்டு பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் பங்களாதேஷ் நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தை மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கி கள்ளத்தனமாக ஆந்திரா வழியாக எடுத்து வந்து சென்னையில் விஷ்ணு மூலமாக ரூ.23 ஆயிரத்துக்கு மருந்தை விற்று வருவது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 145 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>