பரமத்தி தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை வீழ்ச்சி

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல் பாளையம், அண்ணா நகர், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

விவசாயிகள் பரமத்திவேலூர் தினசரி மார்க்கெட்டிற்கு, நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் வாழைத்தார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. உள்ளூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்.

இது கட்டுப்படி ஆகாததால், விவசாயிகள் மரத்திலேயே தார்களை வெட்டாமல் விட்டுள்ளனர். பழுக்கும் நிலையில் உள்ள வாழைத்தார்களை மட்டும் வெட்டி விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.  இதனால், தற்போது 700க்கும் குறைவான வாழைத்தார்களே விற்பனைக்கு வருகிறது. கோயில்கள் மூடப்பட்டு, விசேஷங்கள் நடைபெறவில்லை.கொரோனா ஊரடங்கால் 12 மணிக்கு மேல் கடைகள் மூடப்படுகிறது. இதனால், வாழைத்தார் வரத்தும், விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரம் ₹300க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் நேற்று ₹150க்கும்,  ரஸ்தாளி ₹250க்கும், பச்சை நாடன்  200க்கும், கற்பூரவள்ளி 250க்கும் விற்பனையாகிறது. மொத்தன் வாழைக்காய் ஒன்று ₹3 முதல் ₹5 வரையிலும் விற்பனையாகிறது. விலை குறைந்துள்ளதால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: