கொரோனா தொற்றால் டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் சந்திரசேகர் உயிரிழப்பு

சென்னை: டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஏராளமான வீரர்களை உருவாக்கிய முன்னாள் தேசிய சாம்பியன் சந்திரசேகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். சென்னையில் வசித்தவர் வேணுகோபால் சந்திரசேகர்(63). டேபிள் டென்னிஸ் வீரரான அவர் 3 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும் யுஎஸ்.சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்திருக்கிறார். இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி தன்னை கவுரவித்துக் கொண்டது. எஸ்.ராமன், ஜி.சத்யன், ஆர்.எஸ்.ராஜா, வி.சீனிவாசன் என ஏராளமான வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார். சந்திரசேகர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவுமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* ஏற்கனவே 36 நாட்கள் கோமா

சந்திரசேகர் மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள 1984ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு, ஆள் மாற்றி மயக்கமருந்து தந்ததால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் 36 நாட்கள் கோமாவில் இருந்தார். மொத்தம் 81 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவருக்கு பேச்சு, பார்வை, நடை எல்லாம் பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விளையாட முடியாமல் போன சந்திரசேகர் இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். மருத்துவமனை மீது அவர் தொடர்ந்த வழக்கில்  ரூ.17.37லட்சம் இழப்பீடு வழங்க 1993ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories:

>