திறந்தவெளியில் கிடக்கும் மூட்டைகள் மழைக்கு முளைத்த நெல் மணிகள்-கொள்முதல் செய்யாததால் அவலம்

திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கடந்த மார்ச் 23ம் தேதி 34 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் தந்துள்ளது. ஆனால் 14 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில் ஏப்.23ம் தேதி திடீரென மையம் மூடப்பட்டது.

இது தெரியாமல் ஏப்.24ம் தேதிக்கு பின்பு விளைந்த நெல்லை விவசாயிகள் வாகைகுளம் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாக இப்பகுதியில் பெய்த மழையால் கொள்முதல் நிலையத்தில் இருந்த மூட்டைகள் மற்றும் பரப்பி வைத்த நெல் முளைக்க துவங்கியுள்ளது. இது விவசாயிகளிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது. நெல் முளைத்தது குறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளனர்.

வாகைகுளம் விவசாயிகள் பாஸ்கரன், செந்தில்குமார் கூறுகையில், ‘‘கொள்முதல் நிலைய அதிகாரிகள் அலட்சிய போக்கே நெல் முளைப்பு ஏற்பட காரணம். வாகைகுளம், பெருகாமநல்லூர் ஆகிய இரண்டு கொள்முதல் மையங்களுக்கும் ஒரே அதிகாரி நியமிக்கப்பட்டார். இதில் பெருங்காமநல்லூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் அதிகளவில் வியாபாரிகள் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ததால் மாவட்ட நிர்வாகம் அந்த மையத்தை மூடியது.

அதே அதிகாரி இந்த மையத்தையும் பார்ப்பதால் வாகைகுளம் கொள்முதல் நிலையத்தையும் மூடிவிட்டனர்’’ என குற்றம் சாட்டினர்.

நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மழை காலத்திற்கான நெல் கொள்முதல் முடிவடைந்துவிட்டது. அடுத்த கோடைகால நெல் வாங்க அரசு அனுமதியளிக்கும்’’ என பதில் அளித்தனர்.

Related Stories:

>